
"அன்புள்ள பிகேபி ,
உங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வலையோடிகளில் நானும் ஒருவன்.சமீபகால உங்களது வலைப்பதிவுகளில் ஒரு எழுத்தாளரின் ஆழம்,வலையோடி வாசகர்களின் தேடல் என்ன,தேவை என்ன என்பதைத் தெளிவாக கண்ணூட்டம் காண்பவரின் கருத்தாழம் வெளிப்படுகிறது.வலைப்பின்னல் என்பதும்,வலைத்தேடல் என்பதும் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி,இப்பொழுது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவு, காற்று, நீர்,ஒளி இவற்றுக்கு அடுத்தபடியாக இன்றைய மானுடப்பிறப்பின் ஒரு அங்கமாக மாறிப்போனது வலைப்பின்னல்.இன்றைய நாளிலிருந்து 20 அல்லது 25 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அன்றைய மனிதனின் (வலைப் பின்னலற்ற)வாழ்க்கையில் இந்த உலகையும்,உறவுகளையும் தன்னோடு சார்புபடுத்திக் கொள்ள சிறிதளவேணும் காலம் கிடைத்திருக்கும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுவும் இயந்திரமயமாகிப் போனது. மெக்ஸிகோவில் இல்லறம் கொண்ட மகனுடன் வலைப்பின்னலில் முகம் பார்த்துப் பேசி, மனதில் பேரன்பும்,விழிகளில் வெள்ளத்தையும் ஒடவிடும் மதுரைத் தாய்.மலைக்கும் மடுவுக்கும் தொடர்பு கொள்ள இங்கு முடியும் என்றாலும் வலையோடலில் அன்பும்,பாசமும் ஒடமுடிவதில்லை.எங்கு முடியும் இந்த வறட்சியான வளர்ச்சி? உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்,தெரிந்திருந்தால் தெரிவியுங்கள் எனக்கு."
என்னத்தை சொல்ல நான். விஞ்ஞானம் வளர வளர ஆயிரம் நன்மைகளை நாம் கண்டாலும் அதற்கேற்றார் போல் நாம் இழக்கும் இழப்புகளும் சொல்லிமாளாதனவே. அந்தகாலப் பெரியோர் சொன்ன வாக்கு் தான் நினைவுக்கு வருகின்றது.
வருந்தி அழைத்தாலும் வராதன வாரா.
பொருந்துவன போம் என்றால் போகா.
:)
