Saturday, May 17, 2008

வித விதமான மனிதர்கள்


எனது இந்த பிகேபி வலைப்பதிவுக்கு வந்து செல்லும் நண்பர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு பெரிய அபிப்ராயம் உண்டு. காரணம் பெரும்பாலும் நான் மெலிதான விஷயங்களை இங்கு பேசுவதைவிட சொரசொரப்பான விசயங்களையே அதிகம் பேசி போரடித்திருக்கின்றேன். ஆயினும் தவறாமல் வந்து பொறுமையாய் படித்து தங்கள் பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தி... உண்மையைச் சொல்லப்போனால் இங்கு எனது அநேக பதிவுகளுக்கு காரணமே இந்த நண்பர்கள் தான். இதைப் பற்றி எழுதுங்களேன், அல்லது இதை எப்படிப் பண்ணுவது என சொல்லுங்களேன் அல்லது இதற்கு ஏதாவது மென்பொருள் உண்டா அப்படி இப்படி என்று கேள்விகள் கேட்டே அநேக பதிவுகள் என்னை போட வைத்துவிட்டனர். நான் எழுத நினைப்பது ஒன்றாயிருக்க கடைசியில் நண்பர்கள் கேட்டதையே பதித்து நின்றிருக்கின்றேன்.

அதையும் தாண்டி சில நண்பர்கள் "பிகேபி I think there is a spelling mistake in this post"-ன்னு சொல்லி என்னை திருத்தியிருக்கின்றார்கள். சில நண்பர்கள் "This is not good for you PKP,do this way" அப்படினு சொல்லி அக்கரையாய் ஆலோசனை கொடுத்திருக்கின்றார்கள். இன்னும் சில நண்பர்கள் தாங்கள் கேள்விப்பட்ட நல்ல தகவல்களை எனக்கும் மின்னஞ்சலாய் அனுப்பி மகிழ்ந்திருக்கின்றார்கள்.இப்படி பதிவுகள் எழுதுவது நான் மட்டுமே ஆயினும் இதுவரை இவ்வலைப்பூ ஓடிக்கொண்டிருப்பதற்கு முழ முதற்காரணம் இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தான் என்றால் அது மிகையாகாது.(பெப்ஸி உமா நியாபகம் வருதா? :))

சில தினங்களுக்கு முன் கூட தமிழில் ஒரு சந்தேகத்தை கேட்டிருந்தேன். அப்பாடா எத்தனை பின்னூட்டங்கள். நண்பர்கள் எத்தனை தெளிவாய் இருக்கின்றார்கள் என தெரிந்து கொண்டேன். "தமிழ் அண்ணை வாழ்க" கோஷ்டி இது இல்லை எனப் புரிந்தது. இரண்டு வல்லின மெய்யெழுத்துகள் - க் ச் ட் த் ப் ற் -வரின் ஒன்றாக வாரா-னு அற்புதமாக விளக்கம் அளித்து பலரும் வியக்கவைத்தனர்.

எனக்கு இப்போதெல்லாம் எழுத கொஞ்சம் பயமாய் இருக்கின்றது. அறிமுகமே இல்லாத 1500 பெரியவர்கள் அமர்ந்திருக்கும் சபையில் எழுந்து பேச என்னை யாரோ கட்டாயப்படுத்துவது போல் உள்ளது.

வயதான பெரியவர் ஒருவர் எனக்கு எழுதியிருந்தார்.
"அன்புடைய அறிஞர் திரு பி.கே.பி. அவர்களுக்கு நன்றிகள் பல. என்னைப்போல் எழுபது அகவை தாண்டியவனுக்கும் கூட கணினியில் ஆர்வம் காட்ட உதவும் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.

ஒரு மருத்துவரிடம் பல் நோவுக்கெனச் சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது பொய்ப்பல் கட்ட அளவுகள் எடுத்துப் பூர்வாங்கப் பணிகள் துவக்கப்பட்ட அமர்வில், மெழுகுக் கலவையின் சூடாக்கிய பல்வடிவை வாயினுள் இட்டு , முகத்தின் மீது செல்லோ டேப் பலவாறாக ஓட்டிவிட்டு 61, 62. 63, 64, 65, 66. வரை ஆங்கிலத்தில் உறக்க உச்சரிக்கக் கூறினார்.
அவரது கூற்றின்படி உச்சரித்து வாய் கழுவி எழும் போது அவருக்குப் பிரியமான மந்திர எண்களாஅவை ? எனக் கேட்டேன். அவர் முறுவல் பூத்து இதுநாள் வரையில் என் அனுபவத்தில் இப்படி ஒரு கேள்வியை எவரும் கேட்டதில்லை என்று கூறி விளக்கம் சொல்லிப் பாராட்டினார். அந்த எண்கள் வாயின் உதடுகளின் குவிப்பு, நாவின் சுழற்சி, மடிப்பு, திண்மை,மென்மை, வலிமை இவற்றின் தொகுப்பாக அந்த எண்களின் உச்சரிப்பு இருக்கும். அதனை வைத்து உங்கள் உட்தாடையினில் பல்செட் எவ்வாறு பொருந்துகின்றது என்பதை நிர்ணயிக்க முடியும் என்றார். என் கேள்வி மிகவும் அற்பமானதாகத் தென்பட்டாலும் அதன் உண்மைப் பொருளைக் கூறிய அம்மருத்துவரை நான் மிகவும் மதிக்கிறேன்

இதை ஏன் உங்களிடம் பேசுகின்றேன் என்றால், கணினி அறிவும் முதிர்ச்சியும் பெற்றோர் ஆங்கிலத்தினின்றும் தமிழுக்கு வந்து உதவுவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக தமிழ் உள்ளீடு செய்து சிறப்பாக கணினி நுணுக்கங்களை தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சேவை ஓர் இன்றியமையாததாகும்.."
இப்படியாக எழுதியிருந்தார்.
உங்கள் விலைமதிப்பற்ற வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா.

இது இப்படி இருக்க மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து ஒரு மருத்துவர் தானும் எனது பதிவுகளை விடாமல் படித்துவருவதாக எழுதியிருந்தார்.சத்தியமாய் அதிர்ச்சியாகிப் போனேன். மருத்துவ துறைக்கும் எனது பதிவுகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே.

இப்படி இவ்வலைப்பதிவு பக்கங்களில் வித விதமான மனிதர்கள்.

முன்பெல்லாம் உங்கள் நண்பர்களுக்கெல்லாம் இவ்வலைப்பதிவை அறிமுகப்படுத்துங்கள் என உங்களிடம் கேட்கலாமோவெனத் தோன்றும். இப்போது ஐயோ யாருக்கும் இவ்வலைப்பதிவை அறிமுகப்படுத்தாதீங்கனு சொல்ல தோன்றுகிறது.

ஏறக்குறைய 645 பேர் மின்னஞ்சல் வழியும் 308 பேர் RSS ரீடர் வழியும் படிக்கின்றார்கள் என Feedburner சொல்றான்.
நேரடியாக தளத்திற்கே வந்து சராசரியாய் தினமும் 500-றிலிருந்து 650 பேர் வரை படிக்கின்றார்கள் என Statcounter சொல்றான்.
இப்படியாய் போய்கொண்டிருக்கின்றது எண்கள்.
ஏறக்குறைய 60% வருகை நேரடியாக தளத்துக்கே வருபவர்கள்.பிற சுட்டிகள் மூலம் வருபவர்களில் பெரும்பாலோர் எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணனின் sramakrishnan.com -மிலிருந்தும் இன்னும் பலர் thenkoodu.com வழியும் வருகின்றனர் என Google analytics சொல்றான்.இதுவே போதுமென நினைக்கின்றேன்.

நண்பர் Prakash K கேட்டிருந்தார்
How to make a blog more popular like ur blog....! give some tips.

நெஜமாவா பிரகாஷ்! இந்த வலைப்பதிவையா popular என்கின்றீர்கள். எதை வைத்து இப்படி சொன்னீர்களெனத் தெரியவில்லை. என்னை வைத்து காமெடி கீமெடி ஒன்ணும் பண்ணலையே?? :)

டிப்ஸ் கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்றே நினைக்கின்றேன் பிரகாஷ்!!

ஒன்றுமே தெரியாத ஒருவருக்கு ஒரு விஷயத்தை சொல்லி விளக்க என்ன செய்வேனோ அதையே தான் நான் இங்கு எழுத்தால் விளக்க முற்படுகின்றேன்.இதில் அதிகமாய் தொழில் நுட்பத் தகவல்கள்.
வேடிக்கை என்னவென்றால் இங்கு வந்து செல்லும் நண்பர்களெல்லாம் தொழில் நுட்பங்களில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்களும் அதை பொறுமையாய் படிக்கின்றார்கள் எனில் அவர்கள் பொறுமை நிச்சயம் அபாரமே.

அவர்களுக்காக இங்கு ஒரு விவாதகளத்தை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். ஆங்கிலத்தில் Geeks அல்லது Nerds என்பார்கள். தமிழில் படிப்பாளிகள் எனலாமோ?
நீங்கள் இந்த ரகமெனில் இத்தளம் உங்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாயிருக்கும். நண்பர்கள் சிலர் நடத்துகின்றனர்.ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். But It looks great.முயன்று பாருங்கள்.
forum.Only4gurus.org

எனது Techies நண்பர்களுக்கு இன்னொரு சுட்டி கூட..
A free training From HP
Introduction to HP BladeSystems Web based training class.Click this link.

கோபாலிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.
"எனக்கு இப்போதெல்லாம் எழுத பயமாய் இருக்குடா. நிறைய பேரு என் வலைப்பதிவை படிக்க வர்றாங்க.எல்லாம் பெரிய பெரிய தலைங்க போல இருக்குது"

"அட கம்முனு கெட, நீ தைரியமாய் எழுது , நீ எழுதுவதையெல்லாம் யாரும் படிப்பதில்லை. எல்லாம் நீ கொடுக்கும் ஈபுத்தகங்களுக்காக தான் இத்தனை பேர் உன் வலைப்பூ பக்கம் வருகின்றார்கள். மற்றபடி பெருசா ஒண்ணும் நெனைச்சுக்காத"-ன்னு செவிட்டில் அடித்தாற்போல் சொன்னான்.

பக்கத்தில் நீங்கள் காணும் விவேகானந்தரின் அற்புதமான வார்த்தைகள் தான் அப்போது எனக்கு நினைவுக்கு வந்தன.

கம்முனு இருந்தேன்.

கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை நிகழ்சிகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Kamarajar Life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download