Thursday, October 9, 2008

இரண்டாவது சூரியன்

நம்மிடையே அடிக்கடி வந்து விரிவான பின்னூட்டங்களையிட்டு பல நல்ல தகவல்களை சொல்லிச் செல்பவர் நண்பர் முகமது இஸ்மாயில். அவரது சமீபத்திய பின்னூட்டம் ஒன்று என்னை இப்பதிவை எழுதத் தூண்டியது. இஸ்லாமிய குரான் படி அல்லது கிறிஸ்தவர்களின் பைபிளின் படி முதல் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்தது ஈடன் தோட்டத்திலாம். ஏவாள் எனப்பட்ட அந்த உலகின் முதல் பெண், தடைசெய்யப்பட்ட ஒரு பழத்தை சாப்பிட செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டாள். அதாவது அங்கு உலகின் முதல் சோசியல் இஞ்சினியரிங் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இது என்னை சக்கரியா சிட்சின்னிடம் (Zecharia Sitchin) கொண்டு சென்றது. அவரும் இதையேத் தான் சொல்கின்றார். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கொலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படித்து ஆராய்ந்த சக்கரியா சிட்சின் சொல்வது என்னவென்றால் குரங்குமுக சாயல்கொண்டிருந்த நம் முகம் திடீரென இன்றைக்கு நாமிருக்கும் மனித முக சாயலாக மாற வெளி கோளை சேர்ந்த ஒரு கும்பல் தான் காரணம் என்கின்றார். ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு(Nibiru) என்ப்படும் ஒரு கோள் நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள் என்கிறதாம் அந்த பழங்கால சுருள்கள். பூமியில் கிடைக்கும் தங்கம் அவர்களின் விருப்ப பொருளெனவும் அதை தோண்ட நம் மக்களை வேலை வாங்கினார்கள் என்கின்றார் இந்த ஆய்வாளர். இந்த நேரத்தில் நம் இதிகாசங்களில் நாம் படிக்கும் விமானா, பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.

விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என தியரி பேசப்படுகின்றது.

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.

ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.

இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரு தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரு அனுனாக்கிகள் கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரு கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர். எல்லாம் அடுத்த வருடம் மத்தியில் தெரிந்துவிடும்.

நாசா இந்த நிபிரு கதைகளையெல்லாம் சுத்தமாய் மறுக்கின்றது.
http://astrobiology.nasa.gov/ask-an-astrobiologist/question/?id=2759

இதற்கிடையே வரும் அக்டோபர் 17-ம் தியதி தொடர்ச்சியாக இந்தியாவில் 36 மணிநேரம் வெளிச்சமாகவும் அமெரிக்காவில் 36 மணிநேரம் இரவாகவும் இருக்கப்போகின்றதுவென சுட சுட SMS வழியும் ஈமெயில் வழியும் புரளி ஒன்று பரவிக்கொண்டிருக்கின்றது.

கதை என்னமோ சுவாரஸ்யமாய் தான் போய் கொண்டிருக்கின்றது.



என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்

ரமணி சந்திரன் "பாசமலர் தோட்டம்" புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran "Paasamalar Thoattam" tamil novel in pdf format ebook Download. Right click and Save.Download