Monday, August 4, 2008

மின்சார விளையாட்டு

நமது இந்த பிகேபி வலைபதிவுக்கு இன்னும் அநேக புதிய நண்பர்கள் வரத் தொடங்கியிருக்கின்றார்கள். ரெகுலராய் வாசித்தும் செல்கின்றார்கள். சொல்ல வந்த விஷயத்தை எளிமையாய் அனைவருக்கும் புரியும் விதத்தில் எழுத வேண்டும் என்பதே எனது முதல் முக்கிய நோக்கம். சில சமயம் எனக்கு சந்தேகம் கூட வந்ததுண்டு. உண்மையிலேயே நான் இலகுவாய் புரியும்படியாய் எழுதுகிறேனா இல்லை சில உயர்மட்ட ரக தமிழ் எழுத்தாளர்கள் போல் ஒன்றுக்கு இரண்டுமுறை படித்தால் மட்டுமே புரியும் படியாய் கடினமாய் எழுதுகிறேனா என்று.

நண்பர் மாயனின் பார்வைக்கு வந்த நம் வலைப்பதிவை வெகுவாய் விமர்ச்சிரித்திருக்கின்றார். அதற்காக ஒரு பதிவே போட்டிருக்கின்றார். "மிக எளிய மொழி நடையில், அருமையான உதாரணங்களோடு பல புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும், புதிய கணினி விஷயங்களையும் அருமையாக விளக்குகிறார்..." என சர்ட்டிபிக்கட்டே தந்துவிட்டார் போங்கள். இப்போதைக்கு கொஞ்சம் திருப்தி.

மீண்டும் ஒரு முறை நம் நண்பர்களுக்கு சொல்கின்றேன்.இவ்வலைப்பதிவானது கணிணியில் மற்றும் இணையத்தில் ஆர்வமுள்ள ஆரம்பநிலை நண்பர்களை மட்டுமே கணக்கில் கொண்டு எழுதப்படுகின்றது. வல்லுனர்களுக்கும் வித்தகர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சலாம். தயவுசெய்து மன்னிக்கவும்.

பரிமளா கழிந்த முறை இந்தியா வந்திருந்தபோது கொஞ்சம் அசந்துதான் போயிருந்திருக்கின்றாள்.
"பிகேபி, நம்ம ஊரு இப்பல்லாம் முன்னமாதிரி இல்லப்பா. ரொம்பவே முன்னேறிடுச்சுனு" அப்படி இப்படினு நான் வியக்க வியக்க பல கதைகள் சொன்னாள்.
"ஆனால் ஒன்ணே ஒன்ணுதான் நம் ஊரில் எனக்கு பிடிக்கல" என்றாள்.
ஆர்வமாய் என்னது அதுவென கேட்டேன்.
"வீட்டுல A/C இருக்கு பிகேபி, ஃபேன் இருக்கு, ஃபிரிட்ஜ் இருக்கு ஆனா ஒன்ணுமட்டும் இல்ல அது என்னதுனு சொல்லுபாக்கலாம்."என்றாள்.
விழித்தேன்.
"கரண்ட்"என்றாள்.
"ஆமாம் சரியாய் சொன்னாய்.அது நம்மூரில் ஒரு பெரிய பிரச்சனை தான்" என்றேன்.

தப்பிப்பிழைத்த நம் அரசாங்கம் இப்போது அமெரிக்காவோடு ஏதோ அணுபயன்பாட்டில் ஒப்பந்தம் செய்கிறதாம். இனி சீக்கிரத்தில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடே இருக்காது என ஆற்காட்டிலிருந்து ஆக்ரா வரைக்கும் கதைக்கின்றார்கள். இந்த உலகில் எதுவுமே இலவசமாய் கிடைப்பதில்லை. ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெருகின்றோம். என்னத்தை இழந்தோமோ?

பெரும்பாலும் நம்மூரில் மின்சாரம் சீராய் வருவதில்லை. அதிக ஏற்றத்தாழ்வுகளோடு தான் (Surges) வரும்.இம்மின்சாரத்தை நேரடியாக உங்கள் கணிணியில் அல்லது மடிக்கணிணியில் இணைத்தால் அவற்றின் ஆயுசு கம்மியாக வாய்ப்புகள் அதிகம். கண்டிப்பாய் செலவு பார்க்காமல் ஒரு UPS (Uninterrupted Power Supply) அல்லது stabilizer அல்லது குறைந்தது ஒரு Surge Suppressor வழியாவது மின்சாரம் கொடுப்பது தான் நல்லது. தமிழகத்திலிருந்து மனோஜ் தன் மடிக்கணிணி இப்படி மின்சாரம் பாய்ந்து கெட்டுப்போனதை சொல்லி வருத்தப்பட்டான். நீங்கள் உசாராய் இருப்பீர்கள் தானே.

என்.சொக்கனின் லட்சுமி மிட்டல் பற்றிய ஆடியோ புத்தகம் "இரும்புக்கை மாயாவி" இங்கே தமிழில் MP3 வடிவில். N.Chokkan about Lakshmi Mittal "Irumpukkai Maayaavi" Audio book in Tamil MP3 format Download. (Updated) Oops......இந்த அருமையான ஆடியோ புத்தகம் இப்போதும் விற்பனைக்கு உள்ளதால் இந்த சுட்டி நீக்கப்படுகின்றது. இந்த புத்தகத்தை http://www.audible.com -ல் மாதிரி கேட்கலாம் $13.96 க்கு வாங்கலாம்.Tamil என தேடவும். சென்னையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்தும் பிற புத்தகக் கடைகளிலிருந்தும் வாங்கிக் கொள்ளலாம். தவறுக்கு வருந்துகின்றோம். நாம் ஏற்கனவே சொன்னமாதிரி யாருடைய பிழைப்பிலும் மண்ணை அள்ளிப் போடுவது நமக்கு அழகல்ல.