
சோம்பல் மனிதர்கள் ரோபோக்களை அசம்பிள் செய்ய மாய்ச்சல் பட்டு அவ்வேலையை ரோபோக்களிடமே கொடுக்க அவ்ரோபோக்களோ தங்களை தாங்களே உருவாக்கி பூமியை நிரப்பி பின் மனிதனை பின்னங்கால் தட்டத் துரத்துகின்றது. இப்படி ஒரு கெட்டக் கனவு அநேகருக்கு.
ஒருவேளை அப்படி அவ்ளோ பெரிய ரோபோக்கள் உருவாகி நம்மை துரத்தாவிட்டாலும் பொட்டு பொடிசாய் நானோசில்லுப்பூச்சிகள் பல தோன்றி, நம் கட்டுக்கே அடங்காமல், வெறும் சூரிய ஆற்றலை மட்டும் உள்வாங்கிக்கொண்டு கரப்பான்பூச்சிகள் போல இண்டுஇடுக்கெங்கும் சுத்திக்கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றனவாம். சாதா சிலிக்கான் சிப்புகள் தானே அவை. எளிதாய் உருவாகிவிடும். டியூப் லைட்டின் பக்கத்தில் ஒரு பல்லி உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையிலேயே பல்லியா அல்லது யாரோ ரிமோட்டாய் ஏவி விட்ட ரோபோ கம் கேமராவா யானறியேன்.கிச்சன் போகும் போது கூட அது என் கூடவே வருகின்றது.
இப்போது அதுவும் போதாதுவென டீம் ஸ்பிரிட்டையும் ரோபோக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். அவை ஒன்றுக்கொன்று அழகாய் பந்தை கடத்திக் கொண்டு போய் குழுவாய் கால்பந்தாடுகின்றன. பட்டாளம் கூட நெருங்கப் பயப்படும் தீவிரவாத புள்ளிகளையும் நெருங்க துப்பாக்கியேந்திய ரோபோக்கள் குழுவாய் இயக்கப்படுகின்றன. அவைகள் இணைந்து ஒன்றாய் அப்புள்ளியை சுற்றி வளைக்குமாம். அதுவே கொஞ்சம் வித்தியாசமாய் எதிர் வினையாகிப்போய் வீட்டிலுள்ள ரோபோ சாதனங்களெல்லாம் ஒன்றாய் சேர்ந்து எரிச்சலூட்டும் எஜமானனையே அடிக்க வந்தால்..
அவ்வளவுதூரம் ஏன் போகின்றோம். பளாரென நம் கன்னத்தில் ஒரு அறைவிட்டுக் கொண்டு ஸாரி சார் அது ஒரு சாப்ட்வேர் bug-குனு சொல்லி அதுவால் நம்மை சமாளிக்க முடியும். நாம் அதை திருப்பி அடித்தால் அதற்கென்ன வலிக்கவாபோகின்றது.
