Thursday, March 13, 2008

பாட்டியின் கணக்கு

"எப்பாவூ! என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது சொன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம் குறைவதும் நடந்து வந்திருக்கின்றது.

இன்றைக்கோ நிலைமை வேறு.நம்மூர் நிலவரங்களால் மட்டுமல்ல பூமியின் கடைகோடியில் எங்கோ யாரோ ஒருவர் கூட்டம் போட்டாலும் தங்கம் விலை ஏறுகின்றது.
கச்சா எண்ணை விலை ஏறுதாம். அதற்கு தங்கம் என்ன செய்ததாம்.

நம்மூர் அரசியல் நிலவரங்கள் மும்பை பங்கு சந்தையை சிறிதாய் ஆட்டுகின்றது என்பது உண்மையே.என்றாலும் அசலூர் சந்தை நடப்புகள் இன்னும் பெரிதாய் ஆட்டுவிக்கின்றது.

எக்கனாமியை உசுப்பேத்த,இந்த வருடம் வரி செலுத்தும் அமெரிக்க வாழ் மக்களுக்களுக்கெல்லாம் 600 டாலர்களை அமெரிக்க அரசு இலவசமாய் கொடுக்கின்றது. கணவன் மனைவி வேலைபார்த்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தால் 1500 டாலர்கள் வரை அது வழங்குகின்றது

மேலும் எக்கனாமியை உசுப்பேத்த அமெரிக்கா நேற்று $200 பில்லியன் டாலர்களை வங்கிகளில் விடுவதாக (அதாவது அச்சடிப்பதாக) அறிவித்தது. அதனால் நேற்று புசுபுசுவென ஏறிய Dow இன்று பிசுபிசுக்கின்றது.

இதுமாதிரியான தற்காலிக பொருளாதார உசுப்பேற்ற தீர்வுகள் எங்கு போய்விடுமென யாரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை.

நம்மூரின் பணவீக்கம் 5 சதவீதம்.

பொறாமைநாடுகளின் சதியால் ஆயிரம் ஆயிரம் கோடி போலி இந்திய பணங்கள் அசல்போலவே அச்சடிக்கப்பட்டு இந்தியா வந்தால் அது இன்னும் கூடும்.

அமெரிக்கா பண்ணுவது போல் இஷ்டத்துக்கும் டாலர் அச்சிட்டால் அது ஜிம்பாவேயின் இன்றைய நிலை போல் பணவீக்கம் அதாவது Inflation 100,580 சதவீதம் ஆனாலும் ஆகும்.

அப்போது ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்க நீங்கள் மேலே படத்தில் காண்பது போல் ஆயிரம் ஆயிரம் நோட்டுகள் எண்ண வேண்டி வரும்.

பொங்கலுக்கு பின் பாட்டி சொன்னது போல் கடைசியில் தங்கம் விலை குறையவில்லை. காலம் மாறிப்போச்சி பாட்டி-ன்னு பாட்டியிடம் சொன்னால் பாட்டிக்கு கோபம் வருகின்றது.


தமிழில் நகைச்சுவை தினமலர் ஜோக்ஸ் இங்கே சிறு மென் புத்தகமாக. Dinamalar Jokes in Tamil pdf ebook Download. Right click and Save.Download