
கால்ச்சட்டை போட்டிருந்த காலத்திலேயே தபால் தலை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் என பல பண்ணியிருப்போம். இன்று அது ஒரு வேளை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்களுக்கங்கே ஒரு பரணில் இருந்தாலும் இருக்கலாம்.இல்லாமலும் போயிருக்கலாம்.
அப்படியே தான் பலரின் தமிழ் ஆர்வமும். யாருமே வாசிக்கப்போகாவிட்டாலும் எழுதும் ஆர்வத்தில் டைரிகளிலும் நோட்டுபுத்தகங்களிலும் எழுதி எழுதித் தள்ளி, ஊருக்கு ஊர் பழைய அட்டைப்பெட்டிகளில் சிலந்தி பின்னல்களுக்கிடையே புதைந்து போன கதைகளும் கவிதைகளும்,கட்டுரைகளும் காவியங்களும் ஆயிரமாயிரம் இருக்கும்.
இன்றைக்கு நீங்கள் சிக்கியிருக்கும் இந்த நவீன சிலந்திப் பின்னல் (Web)அநேகருக்கு ஒரு வடிகால். வலது இடதுவென வசமுள்ளோரெல்லாம் எழுதிக்குவிக்கின்றார்கள்.
நானும் அப்படித்தான்.இன்றைக்கு சரியாய் நாலாண்டுகள் ஆயிற்று.
தட்டி கொடுத்த நண்பர்கள் சிலர்.சத்தமின்றி தள்ளி நின்று பார்த்து விட்டு செல்வோர் அநேகர்.இருசாராரும் பெரிதாய் உற்சாகமூட்டுகின்றனர்,ஊக்கமளிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் பதிவையே "தமிழ் கலாசுகிறது"வென தலைப்பிட்டிருந்தேன்.தமிழ் இன்னும் ஆக்கப்பூர்வமாய் இணையத்தில் கலாச வேண்டுமென அவா.
இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது.
