Thursday, June 26, 2008

மென்கொடை

எழுதுவது ஒன்றும் அத்தனை எளிதாய் இல்லை.எண்ணங்களில் கரைபுரண்டு ஓடும் வார்த்தைகளை தட்டிதட்டி பதிவாக்கும் போது அவை தடுமாறுகின்றன. காரோட்டும் போது ஆயிரம் எழுத தோன்றும். கணிணியில் உட்காரும் பொது என்னத்த எழுதவென தோன்றும். So called குமாஸ்தா எழுத்தாளன் கதையே இதுவெனில் எழுத்தே பிழைப்பென்றிருப்போர் கதை?. அவ்வப்போது யாரோ ஏதோ ஒருவழியில் கொடுக்கும் உற்சாகம் தான் அவர்களை வாழ வைக்கும் போலும். பள்ளியில் படித்த அந்த சிறுகதை நினைவுக்கு வருகின்றது. ஆசிரியர் பெயர் நினைவில்லை. மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் பேசாமல் எழுத்தை விட்டுவிடலாம், உருப்படியாய் ஏதாவது வேலைபார்க்கலாம் என ரயிலேறி கிளம்பும் அந்த எழுத்தாளரை ஆத்திர அவசரத்தில் காணும் ஒரு வாசகன், அவர் கையில் ரயில் சாளரம் வழியே ஒரு கண்ணீர் முத்தமிடுகின்றான். மீண்டும் எழதும் வேலைக்கே வந்து விடுவார் அந்த எழுத்தாளர். ஒவ்வொரு கட்டுரையும் கவிதையும் கதையும் பிறக்கும் போது அவன் படும் வேதனை பிரசவ வேதனைதான்.

இணையத்தில் வணிக ரீதியில் எழுதுவோர்க்கு வேண்டுமானால் சம்பளம் கிடைக்கலாம். ஆனால் முழநேர அல்லது தன்னார்வ எழுத்தாளர்கள் முழுக்க முழுக்க சில ஆன்லைன் விளம்பரங்களையே நம்பி இருக்கவேண்டியுள்ளது.கூகிள் ஆட்சென்ஸ் வேறு "தமிழ் எதிர்ப்பாளனாய்" இருந்து கொண்டு "பொது சேவை விளம்பரம்" மட்டும் தந்து அவன் பங்குக்கு வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றான்

தீர்வுதான் என்ன?
Paypal ஒரு தீர்வு தருகின்றது.இதை Donation Buttons என்கின்றார்கள். உங்கள் வலைப்பக்கத்தில் இதை நிறுவினால் ஆர்வமுள்ள வாசகர்கள் உங்களுக்கு மாதம் குறைந்தது 1 டாலராவது நன்கொடை வழங்க அது எளிதாய் இருக்கும்.கிரெடிட் கார்டின் ஆதிக்கம் உலகளாவியது. அதுவழியே ஒரு சொடுக்கில் சில டாலர்கள் உங்களுக்கு வாசகர்கள் நன்கொடை வழங்கலாம். பேபாலில் இலவசமாய் கணக்கு ஒன்று நீங்கள் திறக்கவேண்டும். உங்களுக்கும் எளிது, பணம் வழங்க விரும்பும் நண்பர்களுக்கும் அது எளிது.பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்ற தகவல்களை பப்ளிசிட்டி செய்யவேண்டிய தேவையும் வராது.

அதிக விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டியை சொடுக்கலாம்.
https://www.paypal.com/us/cgi-bin/webscr?cmd=_donate-intro-outside

உற்சாக வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தரமான முழநேர எழுத்தாளர்கள் அவர்களின் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க இப்படி டாலர்களாலும் ஊக்குவிக்கப்படவேண்டும். அப்போது தான் நல்ல நல்ல படைப்புகளை நம் தமிழுலகம் எதிர்பார்க்க முடியும்.நல்லவேளை நான் ஒரு அலுவலகம் போய் வரும் குமாஸ்தா எழுத்தாளன்.

தமிழ் சிறுகதைகள் தொகுப்பு இங்கே சிறு மென் புத்தகமாக. 12th Standard School Short Stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download