
ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர் கையில் விசா, பாஸ்போர்ட் எதுவுமில்லை. அத்தோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டும் யுத்த நெருக்கடியில் இருந்த நாட்கள் அவை. பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் முன்பாக அவரது நண்பர்களில் ஒருவர் நாலைந்து பொட்டலங்கள் சாப்பாடு தந்து நீங்கள் பாகிஸ்தானிற்குள் போகிறீர்கள். அது எதிரியின் தேசம் உங்களுக்கு சாப்பாடு கூட கிடைக்காது இதைக் கொண்டு செல்லுங்கள் என்று தந்திருக்கிறார்.
சதீஷ்குமார் அதை மறுத்தபடியே இந்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டால் இன்னொரு மனிதன் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்றாகிவிடும். ஆகவே எனக்கு வேண்டாம். பட்டினியால் சாவதாக இருந்தால் கூட பரவாயில்லை பாகிஸ்தானில் செத்துப் போகிறேன் என்று நடக்கத் துவங்கினார்.
எல்லை காவலர்கள் அவரைப் பற்றி நாளிதழில் வெளியான செய்தியால் தடை செய்யாமல் அனுமதி தந்தார்கள். பயமும் தயக்கமுமாக பாகிஸ்தானினுள் நடக்க துவங்கிய போது ஒரு கார் அருகில் வந்து நின்று பாகிஸ்தானியர் ஒருவர் இறங்கி வந்து நீங்கள் தானா சதீஷ்குமார் என்று கேட்டிருக்கிறார்.
ஆமாம் என்றதும் உங்களைப் பற்றி ஒரு மாலை செய்தியேட்டில் வாசித்தேன். அப்போது இருந்து நீங்கள் பாகிஸ்தான் வருவதற்காக காத்திருந்தேன். மிக நியாயமான காரணத்திற்காக நடைபயணம் செல்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்னோடு காரில் வாருங்கள் என்று அழைத்தார்.
அறியாத உலகில் எதிர்படும் முதல்மனிதனே இவ்வளவு அன்பாக நடத்துகிறானே என்று வியந்தபடியே தாங்கள் காரில் வர முடியாது, முகவரியை தாருங்கள் வீட்டிற்கு வந்து சேர்கிறோம் என்றார்கள். அவரோ விடாப்பிடியாக, இல்லை வழியில் யாராவது அழைத்தால் போய்விடுவீர்கள் அதனால் உங்கள் பைகளை என்னிடம் தாருங்கள். அதை மட்டுமாவது நான் கொண்டு செல்கிறேன் என்று அவரது உடைமைகளை வாங்கி கொண்டு சென்றுவிட்டார்.
அன்றிரவு அந்த பாகிஸ்தானியர் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கியிருக்கிறார்கள். அப்போது சதீஷ்குமாருக்கு தோணியது. நண்பர் தன்மீதான அக்கறையில் தந்த பொட்டலத்தில் இருந்தது உணவு அல்ல பயம். அடுத்த மனிதனை நம்பமுடியாமல் போன பயம் தான் சாப்பாட்டை கட்டி கொண்டு போகச் செல்கிறது என்ற உண்மை புரிந்திருக்கிறது"
-இப்படியாகச் செல்லுகின்றது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "நடையால் வென்ற உலகம்" என்ற கட்டுரை.அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு பதிவு.முழுக்கட்டுரையையும் கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம்.
நன்றி: http://sramakrishnan.com/deep_story.asp?id=88&page=
அந்த பெரிய மனிதர் சதீஸ்குமார் பற்றிய ஆவணப்படம் இங்கே வீடியோ வடிவில்
http://www.youtube.com/watch?v=m1Ho824PtM0
நன்றி:வேதன் (ஆனா நீங்க யாருனே இன்னும் புரியல ஆமா :))
