
தினமும் இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு குறிப்பிட்ட சுற்றிலாவது அவ்வப்போது பதிவிடல் நல்லது. இப்படி அவ்வப்போது பதிவிடல் நம் வாசகர்களுக்கு மட்டுமல்ல கூகிளுக்கும் ரொம்ப பிடிக்கும். பிறரின் கூகிள் தேடல்களில் நம் பதிவுகளையும் ஆர்வமாய் காண்பிப்பான்.
கவர்ச்சிகரமான தலைப்பிட்டு அழைத்து வந்த வாசகரை நாம் ஒரு முறை ஏமாற்றினால் பின் எப்போதும் எப்படி தலைப்பிட்டாலும் அவர் வரமாட்டார் என்றே தோன்றுகிறது.

நம்பால் விழுந்தோர் வேண்டுமானால் பக்கம் பக்கமாய் படிப்பார்கள். புதிதாய் வருபவர்களை முதல் சில வரிகளிலேயே நம்மை பிடிக்க வைக்க வேண்டும். ஆதலால் என்னைப் பொறுத்தவரை இங்கும் சைஸ் மேட்டர்ஸ்.பெரிசல்ல சிறிசு.
தப்பித்தவறி ஒருமுறை நம் பக்கம் வந்த வாசகருக்கு திருப்தியான தீனி கிடைத்துவிட்டால் மறுமுறை நாம் அழைக்காமலேயே வருவார் என்பது என் நம்பிக்கை. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வார். இங்கு தீனி என நான் சொல்வதில் பலவும் அடக்கம். வேறெங்கும் கிடைக்கா வித்தியாசமான சினிமா செய்திகள், நாட்டு நடப்புகள், அரசியல் அலசல்கள், நுட்பங்கள், நகைச்சுவைகள், கட்டுரைகள், சொந்த அனுபவங்கள் முதலான.
ஆனால் முழுக்க முழுக்க நம் படைப்பாய் இருக்க வேண்டும். சினிமா, அரசியல், கிரிக்கெட், வணிகம் சார்ந்த வலைப்பதிவுகளுக்கு பிரகாச எதிர்காலம் இருப்பது போல் தோன்றுகிறது.
வளர்ச்சியை பின்னூட்டங்கள் கொண்டு அளந்தால் சோர்ந்துதான் போவோம். ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.
எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது. எனக்கு தெரிந்ததை, பிடித்ததை மட்டும் எழுத முயலுகிறேன் and ரொம்ப முக்கியமாய் trying to be cool with everybody.
தகவல், கடி, கிசுகிசு, பிடித்ததுவென கண்டதையும் இரு வரி பதிவுகளாய் எழுதிவந்த காலம் அது. தமிழ் வலைப்பதிவின் முன்னோடிகள் தமிழ் வலைப்பதிவுகள் பெருகவேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்பட்டார்கள். அந்த காலத்திலேயே அநேக சீரியஸ் பதிவுகள் தமிழில் பல்வேறு துறைகள் பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் எழுதப்பட்டன. நானோ ஒன்றுமில்லாதிருந்தேன்.
பாஸ்டன் பாலா அவர்கள் ஒருநாள் "ப்ரியமுடன் பிகேபி நாளை கிசுகிசு சொல்வார்!" என்று முதன்முதலாக தனது வலைப்பதிவு மூலம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார்.அவருக்கு என் நன்றிகள் எப்போதும் உண்டு.
அப்புறம் வந்த சில பதிவுகளில் முதன் முதலாக ஜே பி இரவிச்சந்திரன் பெங்களூர் அவர்கள் "இந்த லிங்க் என் மகனுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது" என பின்னூட்டமிட்டு ஒரு பாஸிட்டிவ் ஜாடை காட்டினார் .இரண்டு நாள் கழித்து முருகபூபதி அவர்கள் "மிகவும் உதவியான சுட்டிகள் நண்பரே. மிக்க நன்றி." என்றார். இவர்கள் இருவரும் இப்போதும் என் பதிவுகளை படிக்கின்றார்களோ இல்லையோ கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டவர்கள்.
பயனுள்ள விஷயங்களை சொன்னால், பயனுள்ள விஷயங்களை தந்தால் அது எப்போதுமே தோற்காது என புரிந்தது. முயன்று பார்த்தேன்.
கடந்த இரண்டாம் தியதி I was so.. excited நமது வலைப்பதிவின் feed count முதன் முதலாக 1000 என்ற நான்கிலக்கத்தை எட்டியது.ஆமாம் நீங்கள் அந்த ஆயிரத்தில் ஒருவனாகும். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதேநாள் நமது வலைப்பதிவின் feed count வெறும் 24 தான். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் மற்ற தமிழ் பதிவர்களுக்கும் இது ஒரு உற்சாக மூட்டலாயிருக்குமே என்றுதான்.
பிராந்திய மொழி வலைப்பதிவுகளின் காலம் தொடங்கிவிட்டது என்றே நினைக்கின்றேன்.
அதுவும் தமிழில் நாம் எக்கசக்கம். போக வேண்டிய தூரம் வெகுதூரமாய் இருந்தாலும் பெருமையாக இருந்தது. இதையெல்லாம் கோபாலிடம் பெருமிதமாக சொல்லிக்கொண்டே வந்தேன். நம்மவர்கள் நடத்தும் "அந்தக்" கடை முன் வண்டியை திடீரென்று நிறுத்தினான். இங்கு பெரும்பாலான "அந்தக்" கடைகளையெல்லாம் நம்மாட்கள் தான் நடத்துகின்றார்கள். பல கேஸ் ஸ்டேஷன்களும், மோட்டல்களும் கூட இந்தியர்களுக்கு சொந்தமானவைதான். பல பாட்டில்களோடும் கேன்பெட்டிகளோடும் கோபால் திரும்ப வந்தான். "என்னடா இது" என்றேன்.
"Knockout" ஆகி ரொம்ப நாளாயிட்டது என்றான்.
