Sunday, December 14, 2008

பொது WiFi-க்களில்

கோடைகால இளவெயிலில் நீண்டதொரு தூண்டிலை வைத்துக்கொண்டு மீன்பிடி ஆர்வலர்கள் மணிக்கணக்கில் கரையோர திண்டுகளில் அமர்ந்து கொண்டு மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் என்ன பொழுதுபோக்கு இதிலென்ன மகிழ்ச்சி கிடைக்கின்றது என யோசித்ததுண்டு.

அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பக்கமோ அல்லது அப்பார்ட்மெண்டுகளின் பக்கமோ கோபால் கொஞ்ச நேரம் சும்மா இருக்க நேரம் கிடைத்தாலும் சும்மா இருக்கமாட்டான். தனது மடிக்கணிணியை திறந்து பக்கத்தில் ஏதாவது பாதுகாக்கப்படாத திறந்த வைஃபை(wifi) சிக்காதாவென தேடுவான். மன்ஹாட்டனில் தூண்டில் போட்டால் அவை எளிதாய் சிக்கும்.

இதெல்லாம் பழையகதை. இப்பொழுது அவன் கம்பெனியிலிருந்து ஒரு Sierra Wireless aircard கொடுத்திருக்கின்றார்கள். மடிக்கணிணியின் ExpressCard slot-ல் அதைச் செருகிக்கொண்டால் நடுக்காட்டிலும் அவனுக்கு இணைய இணைப்பு கிடைக்கின்றது. நான் இன்னும் ஸ்டார்பக்ஸ் காஃபிகடை, டீக்கடை, ஆங்காங்கே இருக்கும் துரித உணவுக்கடைகளின் இலவச வைஃபை-க்களையே நம்பியிருக்கின்றேன்.

எனினும் இந்த இலவச wifi-க்களில் அல்லது எங்காவது சிக்கும் பாதுகாக்கப்படாத திறந்த வைஃபைக்களை பயன்படுத்துவதிலுள்ள அபாயம் எனக்கு தெரியாமலில்லை. அப்பொழுது நாம் நமது முழு இணைய தகவல்தொடர்பையும் இது போன்ற ஏதோ ஒரு நபரின் இணைய இணைப்பு வழியாய் நடாத்துகின்றோம். அந்த நபரோ நமக்கு தெரியாமல் இடையில் ஒரு கருவியினை வைத்து நாம் நடாத்திய தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகளையெல்லாம் இரகசியமாய் பதிவு செய்துவைத்துக் கொண்டு பின்பு பொறுமையாக அமர்ந்து அப்பொட்டலங்களை பிரித்துபார்த்தால் என் கிரெடிட்கார்டு தகவல்கள் அல்லது பாஸ்வேர்டுகள் அல்லது நான் அட்டாச் செய்து அனுப்பிய ரகசிய ஆவணங்கள் எல்லாம் அம்பேல் ஆகிப் போயிருக்கும்.

இதனாலேயே பொது வைஃபைக்களில் என் மடிக்கணிணியையோ ஐபோனையோ இணைக்கும் போது மேலோட்டமாக டைம்பாஸ் இணைய உலா வருவதுண்டு.ஜிமெயிலில் கூட நுழைய விரும்புவதில்லை.http வழியாக செல்லும் போது ஜிமெயிலின் பாஸ்வேர்ட் மட்டுமே என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டாலும் உள்தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை என்பது நினைவிருக்கட்டும். http-க்கு பதிலாக https ஜிமெயிலில் பயன்படுத்தினால் உங்கள் முழு ஜிமெயில் சேவையும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.

இதுபோன்ற பொது வைஃபைக்களிலும் இணைந்து நிம்மதியாக இணைய உலா வர Hotspot Shield அல்லது AlwaysVPN போன்ற மென்பொருள்களை பயன்படுத்தலாம். இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகள் முழமையாக சங்கேதமொழியில் (VPN encryption) நடப்பதால் இடையில் எதாவது மோப்பமென்பொருட்கள் யாராவது வைத்து இருந்தாலும் அவற்றால் புரிந்துகொள்ள இயலாது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இவற்றின் தேவை இல்லாமலிருக்கலாம். ஆனால் பொதுஇடங்களில் இப்பாதுகாப்பு மென்னுறைகளை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.

இன்னொரு சின்ன லாபம்:
நீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் Hotspot Shield வழி நீங்கள் இணையத்தில் இணையும் போது உங்களுக்கு அமெரிக்க ஐபி விலாசம் கொடுக்கப்படுவதால் உங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட தளங்கள் திறந்துகொள்வதோடு அரபுநாடுகளிலிருந்து இது வழியாக தடைசெய்யப்பட்ட VOIP அழைப்புகளும் செய்யலாம் என கேள்விப்பட்டேன்.

ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை:
இம்மென்பொருள்கள் உங்கள் தகவல் பொட்டலங்களின் போக்குவரத்துகளை Hotspot Shield அல்லது AlwaysVPN நிறுவன செர்வர்களின் வழி செலுத்துவதால் நீங்கள் இந்நிறுவனங்களில் முழு நம்பிக்கை கொண்டிருக்கவேண்டுமாக்கும்.


என்னால் முடியும் என்பது
தன்னம்பிக்கை.
என்னால் மட்டுமே முடியும் என்பது
அகம்பாவம்

சித்ராபாலாவின் "யாரோ யாரோடி" புதினம் இங்கே தமிழில்.Chithra Bala "Yaaro Yaaroodi" novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download