Wednesday, December 3, 2008

நன்றி தெரிவித்தல்

நன்றி தெரிவித்தல் தின விடுமுறைகளில் இருந்தேன். இணையப்பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்கவில்லை. ஒரே தினத்தில் என்னவெல்லாம் நடந்துமுடிந்து விடுகின்றது பாருங்கள். புடாபெஸ்ட், ஹங்கேரியைச் சேர்ந்த ஒரு Emergency and Disaster Information Services தளம்.இவர்கள் உலகெங்கும் நடக்கும் அவசரநிலைகளை, இயற்கை சீற்றங்களை, பிற பாதிப்புகளை உடனுக்குடன் அலெர்ட் மேப்பில் இட்டு காட்டுகின்றார்கள்.RSS-ல் போட்டு வைத்துள்ளேன். இந்தியாவின் பெயரும் அடிக்கடி வந்துவிடுகின்றது. சந்தேகமே இல்லாமல் ஒவ்வொரு தினமும் இறைவனின் நன்கொடைதான். அவனுக்கு நாம் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்.

நவம்பர் 31 வராமல் திடீரென டிசம்பர் 1 வந்ததும் தான் புரிந்தது ஆஹா வருசம் முடியப்போகின்றதே என்று.இந்த வருடமும் மின்னல் வேகத்தில் போய்விட்டது. இதுவரைக்கும் நம் வலைப்பதிவில் ஒருவிதமான Consistency-யை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.ஜூலை மாதம் அதிக பட்சமாக 18 பதிவுகளும் பெப்ரவரி மாதம் குறைந்த பட்சமாக 9 பதிவுகளும் இட்டிருந்தேன். "டேய் நீ ரொம்ப எழுதுகிறாய்" என்பது கோபாலின் கம்ளெயின்ட்.எச்சரிக்கையும் கூட. மின்னஞ்சல் செய்யும் நண்பர்களோ ஒரு நாளைக்கு ஒன்றாவது போடுங்கள் சார் என்கின்றார்கள்.Cruise control இதுவரை பயன்படுத்தியதில்லை.

எல்லாவற்றையும் சொல்லிவிடுகின்றாயே என்றால் "தொட்டணைத்தூறும்" வள்ளுவன் வாக்குதான் நினைவுக்கு வருகின்றது. இங்கு எழுதுவதால் இன்னும் அநேகம் கற்றிருக்கிறேன் என்பது தான் உண்மை.அநேக நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். ஆக ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.தொலைத்தது சிறிது தூக்கமும் சில தமிழ் சினிமாக்களும். 8PM to 8AM மின்னஞ்சல் பார்க்கக்கூடாது என்பது ஒரு Soft rule எனக்குள்ளே.

இந்த வருட மத்தியில் அதாவது ஜூன் இரண்டாம் தியதி 1000-த்தை எட்டிய நமது feed count கடந்த நவம்பர் 18-ல் 1505-ஐ முட்டியது. சராசரியாக தினமும் புதிதாக மூவர் நமது வலைப்பதிவை ரெகுலராக படிக்க ஏற்றுக்கொள்கின்றார்கள். இது என்னை பொறுத்தவரைக்கும் மிகப் பெரிய எண்.வரும் வருடம் கொஞ்சம் "ட்ரிம்" செய்யவேண்டும். இது தவிர RSS நுட்பத்தை பயன்படுத்தாமல் தினமும் நம் வலைப்பதிவுக்கு நேரடியாக வந்து படிக்கும் நண்பர்களும் அநேகம். நம் நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கு தவறாமல் இவ்வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதாலேயே இது சாத்தியமாகிற்று என்பது துல்லியம்.வந்தவர்களை கவனிக்கத் திணறும் விருந்துபசரிப்பவர்களை பார்த்திருக்கின்றீர்களா? நான்.

நமது விக்கி களத்தில் புதிது புதிதாக முகங்கள். கேள்வி கேட்பதோடல்லாமல் ஆர்வமாய் பதிலும் அளிக்கின்றார்கள் நம் நண்பர்கள். ஒரு துறையையும் விட்டபாடில்லை.

இன்றைக்கு Knowledge is power.அதனால் தான் சந்திராயன் விட்ட நம்மை மதிக்கின்றார்கள். தகவல்கள் தேட உதவும் கூகிள் நம்பர் ஒன்.அணுகுண்டு நாடுகளுக்கு தனி கம்பளம்.தகுந்த நுட்பம் இருந்திருந்தால் மின்வெட்டு இருந்திருக்காது.தாய் மொழியிலேயே கற்றவர்களுக்கு சிகரங்கள் எளிதாகின்றன.இது நம் கண்கூடு.ஆனால் நானோ என் பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேசன் தேடுகின்றேன். திரைக்கும் சின்னத்திரைக்கும் நாம் கொடுத்த முக்கியத்துவத்தில் கால்பங்கு கல்விக்கு் கொடுத்திருந்தால் நம்மை எவனோ ஒருவன் துரத்த நாம் ஓடிக்கொண்டிருந்திருக்க மாட்டோம்.ஆனாலும் கல்விதான் இன்றைக்கு நம் பாரதத்தை தலை நிமிர வைத்திருக்கின்றது. எதற்கெடுத்தாலும் இஸ்ரேலியர்களை உதாரணமெடுக்கும் நாம் அவர்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை நாம் உணர்ந்ததில்லை. இத்துணூண்டு இஸ்ரேலில் ஆறு பல்கலைக்கழகங்கள் உலகின் டாப் ரேட்டட் பல்கலைக்கழகங்கள். ஆறு மில்லியன் இஸ்ரேலியர்களால் ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.10,000 பேருக்கு 109 என்ற விகிதத்தில் அறிவியல் ஆய்வு கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதற்கான பலனையும் அவர்கள் காண்கின்றார்கள். எனக்கோ கிரிக்கெட் பார்க்கவேண்டும்.

நண்பர்களுக்கெல்லாம் என் நன்றிகள்.



ஞானமே முக்கியம்,
ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும்
புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
-பைபிள்

மீனாக்குமார் "யாவருக்கும் திருக்குறள்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Meena Kumar Yaavarkkum Thirukkural in Tamil pdf ebook Download. Right click and Save.Download