Monday, September 8, 2008

ஐந்து SMSக்கு கிலோ அரிசி

கட்டுமானத்துறையில் இருப்பார்கள். ஆனாலும் கணிணியில் அத்துபடியாய் இருப்பர். மருத்துவத்துறையில் இருப்பார்கள் அதனாலென்ன கணிணியை பிரித்துபோட்டு அவர்கள் மேய்ந்துவிடுவார்கள். "பேசாமல் நீர் கம்ப்யூட்டர் இஞ்சினியராகவே போயிருக்கலாம். இன்னும் கொஞ்சம் காசாவது கெடைச்சிருக்கும்"னு சகதர்மினி முணுமுணுப்பதும் கேட்காமல் USB வயர்களும் சிடிக்களும் குவிந்திருக்க இவர் கணிப்பொறியிலேயே கதியாய் கிடப்பார். எல்லாருக்குமே ஒரு படமாவது நடிக்கும் அளவுக்கு நடிக்கும் திறமை இருக்கும். அதுபோலத்தான் இந்த கணிணிக்கு விசிறியாகும் காரியமும் எல்லாராலுமே கூடும்.அப்படியே இன்னும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால் சில கணிப்பொறியாளர்களை கூட இந்த அயல்துறைக்கார விசிறிகள் விஞ்சி நிற்பர்.

இப்படி இரு துறைகளில் ஜமாய்ப்பவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாய் இருக்கும். புலம்பெயர்ந்த தமிழன் போல.அவனுக்கு தமிழும் தெரியும் ஆங்கிலமும் கற்றிருப்பான். ஆனால் அயல்நாட்டில் பிறக்கும் நம் தமிழ் சிட்டுகள் வழக்கம் போல ஆங்கிலம் பக்கமாய் சாய்ந்துவிடுவர். அவர்கள் பேசும் "டமிள்" சமயத்தில் சுவையாகவும் இருக்கும். காரையும் கராஜையும் சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.இங்கு பிறந்த தமிழ் பொடிசு ஒன்று என்னைக் கேட்டது "காப்பாற்றவா அங்கிள்?". முதலில் புரியவில்லை. கொஞ்சம் யோசித்தபின்பு புரிந்தது "Need any help uncle?" என்பதை அப்பொடிசு அப்படி மொழிபெயர்த்திருக்கின்றது. இப்படி NRIகுழந்தைகள் ஆங்கிலக்கரையோரமாய் ஒதுங்கிவிடுகின்றார்கள். ஒரே ஒரு நன்மை பாதி வரலாறுபுவியியலும் பாதி அறிவியலும் ஹிஸ்டரி,டிராவல் சேனல் பார்த்தோ அல்லது டிஸ்கவரி சேனல் பார்த்தோ கற்றுப்பர். நமக்கோ அது விட்டு விட்டுத்தான் புரியும். கூர்ந்து கவனிக்க வேண்டும்.யாருக்கு பொறுமை இருக்கின்றது. கமுக்கமாய் நடிகர்கள் பேட்டிக்கு தாவிவிடுவோம்.

ஆமாம் நீ என்னச் சொல்ல வருகின்றாய் என கேட்கின்றீர்களா? சரியாய் கேட்டீர்கள். இப்போதெல்லாம் இப்படி குழப்பம் குழப்பமாக எழுதுவதே என் வேலையாகப் போய்விட்டது. ஏன் இப்படி எழுதுகின்றேன். ஒருவேளை நான் கற்றவற்றை குறித்துவைக்கும் ஒரு நோட்டுபுத்தகம் போலவே நான் இவ்வலைப்பதிவை பாவிப்பதால் இருக்கலாம். பலசமயம் நான் ஏற்கனவே எழுதிய ஒரு பழைய பதிவிலிருந்து ஒரு குறிப்பிட்ட சுட்டியை எடுக்க பலவாறு என்பதிவுகளை தேடியும் கிடைக்காமல் தோற்றிருக்கின்றேன். அங்காங்கே பலவிஷயங்களை பலமாதிரியும் கிறுக்கி வைத்திருப்பதால் இப்படியாகிப்போகின்றது. இதனைப் போய் நான் வகைவகையாக தொகுத்து அட்டவணைபடுத்தியிருக்கின்றேன் என நண்பர் கூடுதுறை முதலில் சொன்னபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது வலைப்பக்கத்தில் எனது பழைய பதிவுகளை முடிந்த அளவுக்கு அழகாக வரிசைப் படுத்தியிருக்கின்றார். நீங்களும் போய் பார்வையிடலாம். அவருக்கு என் நன்றிகள்.

பிகேபி அட்டவணை

சம்பந்தமே இல்லாமல் ஐந்து வரிகள் இங்கே.

  • நடிகர் நெப்போலியன் ஜீவன் டெக்னாலஜீஸ் எனும் மென்பொருள் நிறுவனத்திற்கு சேர்மனாக உள்ளார்.
  • iPhone என்ற சொல்லுக்கு உண்மையான சொந்தகார நிறுவனம் சிஸ்கோதானாம். முதலில் மோதிக்கொண்ட இருவரும் பின் சமரசமாகிக்கொண்டனர். புதிய ஆப்பிள் ஐபோனையும் பழைய சிஸ்கோ ஐபோனையும் மேலே படத்தில் காணலாம்.
  • ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் ஜிமெயில் ஜிமெயில் எனப்படுவதில்லையாம். கூகிள் மெயில் எனப்படுகின்றது.எல்லாம் டிரேட்மார்க் பிரச்சனை தான்.
  • நீங்கள் அமெரிக்காவில் இருக்கீங்களா? AT&T நிறுவனம் வழங்கும் "வீடியோ ஷேர்" சேவை மூலம் கைப்பேசியில் பேசுபவர் முகத்தை மறுமுனை நபர் வீடியோவாக தனது செல்போனில் பார்க்க முடியுமாம். என்ன விலை தான் கொஞ்சம் கண்ணை சுற்றுகின்றது.$0.30 per minute.
  • நீங்கள் இந்தியாவில் இருக்கீங்களா? உங்கள் மொபைல்போனுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு SMS விளம்பரத்துக்கும் 20 காசு கொடுக்கின்றார்களாம் mginger-காரர்கள்.முயன்றுபாருங்கள் நான் கியாரண்டியில்லை. சும்மாவா 5 விளம்பரம் வந்தால் ஒரு கிலோ அரிசி வாங்கலாமே.

பாரதியார் பகவத்கீதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக.வெளியீடு http://www.tamilhindu.com Bharathi Bhagavathgita in Tamil pdf ebook Download. Right click and Save.Download