
1929 ஆம் ஆண்டுகளில் எட்கர் கேய்ஸ் (Edgar Cayce) என்பவர் தூங்கியவாறே வரும் காலத்தில் நடக்கப்போவதை புட்டு புட்டு வைத்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஒன்று வரப்போகின்றது. (a great disturbance in financial circles) அவரவர் பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு பத்திரமாக வைத்திருங்கள் என எல்லாருக்கும் அபய குரல் கொடுத்தார். நியூயார்க்கில் பங்கு வர்த்தகம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. யாரும் அவரை நம்பத்தயாராயில்லை. ஆனால் நடந்தது என்ன? அவர் சொன்ன மாதிரியே ஆறே மாததில் நியூயார்க் பங்கு சந்தை மொத்தமாய் வீழ்ந்தது. மிகக்கொடூரமான Great Depression எனப்பட்ட உலகளாவிய பொருளாதார மந்த நிலைமைக்கு உலகம் தள்ளப்பட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். வங்கிகளில் போடப்பட்டிருந்த தங்கள் பணங்கள் திரும்ப கிடைக்கவில்லை. சோற்றுக்காக வீடு கார் எல்லாவற்றையும் விற்கும் நிலமைக்கு ஆளாயினர். பசியும் பட்டினியும் எங்கும் நிலவியது. வாழ்வே சூன்யமாயிற்று இனிமேல் எழும்பவே முடியாதுவென்றிருந்த நிலையில் இந்த "மகா மந்த நிலமை"யிலிருந்து உலகை எழுப்பிவிட்டது எது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். இரண்டாம் உலகப்போர் தான். போர் வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் செய்ய, தளவாடங்கள் செய்ய அது இதுவென ஏகபட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் உருவாகின. மக்களிடையே பணம் புரளத்தொடங்கியது. இப்படி கோடிக்கணக்கில் உயிர்களை கொள்ளை கொண்ட ஒரு உலகப்போரினால் உலகம் சகஜநிலமைக்குத் திரும்பியது.
அது மட்டுமல்லாமல் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் வரப்போவது பற்றியும் எட்கர் கேய்ஸ் முன்னமே சொல்லியிருந்தாராம். 2004ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய சுனாமியையும் எட்கர் கேய்ஸ் ""Watch for [strife] . . . in the Indian Ocean... " என 1941-லேயே சொன்னதாக சொல்கின்றார்கள்.
இப்படி நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கூறும் அபூர்வ மனித சக்தியை Extrasensory perception (ESP) என்கின்றார்கள். ஆனாலும் விஞ்ஞானிகள் இன்னும் அதை நம்பத்தயாராயில்லை. அதற்கும் புதிதாய் அவர்கள் ஏதாவது துகள்கள் கண்டுபிடிக்கவேண்டும்.
1945ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று எட்கர் கேய்ஸ் தனது உடல் இந்தமாதம் ஐந்தாம் தியதி அடக்கம் செய்யப்படும் என உலகுக்கு முன்அறிவித்தார். அப்படியே நடந்தது.
