கதவை தட்டி என்னை எழுப்பி "அங்கிள் நான் சொல்லலை.அவர் ஜெயிச்சுட்டார்"-னு ஓவென உற்சாகம் பொங்க சொல்லி விட்டு பள்ளிக்கு பறந்து போனான் பக்கத்துவீட்டு சிட்டு.ஒன்பது வயது நண்பன்.பாதி கழுதை வயதாகின்றது எனக்கு.அரசியல் பேச ரொம்பவும் யோசிக்கின்றேன்.
நியூஸ்வீக் "The World Hopes for Its First President" என்று தலைப்பிட்டிருந்தது. உலகத்தின் முதன் அதிபர் என அவரை பிரகடனபடுத்தியிருந்தது.அவ்வளவு விறுவிறுப்பு உற்சாகம் எதிர்பார்ப்பு உலகமெங்கும்.எந்த பேதமும் இன்றி எல்லோரும் விரும்பும் தலைவராய் அவர் தெரிகின்றார். அதற்கேற்றாப்போல் அவரும் வெற்றியுரையாற்றும் போது எல்லைகளை கடந்து எல்லா மக்களையும் நினைவுகூர்ந்து "மாற்றத்துக்காக" விளித்திருந்தார். மக்கள் பெரும் சிக்கல்களில் தவிக்கும் போதெல்லாம் அதிலிருந்து தங்களை காப்பாற்ற கடவுள் அவதாரமாக தோன்றுவார் என்பார்கள். உலகமே இவர் மேல் "நம்பிக்கை" வைத்திருக்கின்றது.
ஐரோப்பிய ஐரிஷ் பிண்ணனி கொண்ட அமெரிக்க அம்மா வெள்ளை நிறத்தவர், ஆப்ரிக்க அப்பா கருப்பு நிறத்தவ்ர், பிறந்தது ஹவாய், வளர்ந்தது ஆசிய இந்தோனேசியா. இஸ்லாமிய சூழலில் பிறந்துவளர்ந்து கிறித்தவ சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவர். கையில் எப்போதும் ஒரு ஹனுமன் சிலை இருக்கும் என கேள்விப்பட்டேன்.இப்படி இவரில் உலகம் முழுக்கவும் கலந்திருக்கின்றது.
ரோலர்கோஸ்டர்களில் போகும் முன் "Buckle UP" என்போம்.உற்சாகத்திலும் கத்துவார்கள். பயத்திலும் கத்துவார்கள்.முழுசுற்றும் முடியும் வரை நம்மால் எதுவும் செய்யமுடியாது. கத்திக்கொண்டே இருப்போம் காரணம் தெரியாமல்.
இன்னொரு விளக்கை ஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை. |